சமையல் குறிப்புகள்
சாத வகைகள்

தக்காளி சாதம்

tomato rice

தேவையான பொருட்கள்

அரிசி - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 4
மராட்டி மொக்கு - 1
ஏலக்காய் - 1
அன்னாசி மொக்கு - 1
பிரியாணி இலை - 1/2
சோம்பு (பொடித்தது) - 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மசாலாதூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கோப்பை
பால் - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.

3. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மசாலா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

4. பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

5. தக்காளி நன்கு வதங்கியதும், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

6. பின்னர் அதனுடன், 2 1/2 டம்ளர் தண்ணீர் (அரிசிக்கு இரண்டரை மடங்கு), பால், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

7. கொதி வந்ததும், கழுவிய அரிசியை போட்டு குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை (குக்கரைப் பொறுத்து சாதம் குழைய விடாமல்) வேக வைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. வெங்காயம் தயிர் பச்சடி தக்காளி சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.