சமையல் குறிப்புகள்
சாத வகைகள்

பருப்பு சாதம்

paruppu rice

தேவையான பொருட்கள்

அரிசி - 200 கிராம் (அ) 1 குவளை (டம்ளர்)
துவரம் பருப்பு - 50 கிராம் (அ) 1/4 குவளை (டம்ளர்)
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வர மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 10 பல்
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 3 தேக்க்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. அரிசியையும், துவரம் பருப்பையும் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

2. வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

3. தக்காளியையும் பூண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.

4. அடுப்பில் குக்கர் பாத்திரத்தை வைத்து 2 தேக்கரண்டி நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, பெருங்காயம், இரண்டாக பிளந்த வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

5. பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

7. அனைத்தும் நன்றாக வதங்கியவுடன், இதனுடன் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

8. கொதி வந்ததும், ஊறவைத்து கழுவிய அரிசி மற்றும் துவரம் பருப்பை போட்டு குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை (குக்கரைப் பொறுத்து சாதம் குழைய விடாமல்) வேக வைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.

9. ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து 1 தேக்கரண்டி நெய் விட்டு சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. உருளைக்கிழங்கு பொரியல் அல்லது உருளைக்கிழங்கு மசால், பருப்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.