சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

பொரி உருண்டை

pori urundai

தேவையான பொருட்கள்

பொரி - 250 கிராம்
குண்டு வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)

செய்முறை

1. பொரியை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

2. வெல்லத்தை நன்றாக உடைத்து 1/4 குவளை (டம்ளர்) அல்லது வெல்லம் மூழ்கும் வரை மட்டும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

3. பாகு லேசான கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

4. இறக்கி வைத்த வெல்லப் பாகில் வறுத்த பொரியைப் போட்டு நன்றாக கிளறவும்.

5. வெல்லப்பாகு சூடு ஆறுவதற்குள் பொரி கலவையை தேவையான அளவு உருண்டையாக பிடிக்கவும்.

6. சூடு ஆறினால் உருண்டை பிடிக்க வராது. அப்படி சூடு ஆறிவிட்டால் மீண்டும் அடுப்பில் லேசான தணலில் வைத்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மீண்டும் உருண்டை பிடிக்கலாம்.

குறிப்பு

1. பொரியை வறுக்கும் போது அடுப்பு தணலை வேகமாக வைத்தால் பொரி சுருங்கி கெட்டித்து விடும்.

2. பாகு காய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் பொரி நமுத்து விடும்.

3. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.