சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

பூர்ண கொழுக்கட்டை

poorna kozhukkattai

தேவையான பொருட்கள்

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 1/4 கிலோ
தேங்காய் துருவல் - 1 கப்
வெல்லம் (குண்டு) - 1/2 கப்
அவல் - 1 கைப்பிடி
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு

1. பச்சரிசியை (1 கிலோ) தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி வடிகட்டி விடவும்.

2. பிறகு இதை ஒரு துணியில் உலர்த்தி நிழலில் காய வைக்க வேண்டும்.

3. அரிசி காய்ந்தவுடன் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

4. பிறகு அரைத்த மாவை வெறும் வாணலியில் ஓரளவிற்கு வறுத்துக் கொண்டு சல்லடையில் சலித்துக் கொள்ளவும். அல்லது அரைத்த மாவை ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். இவ்வாறு சலிக்காவிட்டால் மாவு சிறு சிறு கட்டியாகி விடும்.

மேல் மாவு

1. பதப்படுத்திய அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எண்ணெய் சேர்த்து, அதனுடன் மிதமான சுடு தண்ணீரை தேவையான அளவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பூர்ணம்

1. வாணலியில் தேங்காய் துருவலைக் கொட்டி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. அவலை தண்ணீரில் கொட்டி சிறிது நேரம் கழித்து தண்ணீரை பிழிது எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து பாகாக உருகியவுடன், வறுத்த தேங்காய் துருவலையும், பிழிந்து வைத்த அவலையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பாகு கொஞ்சம் கெட்டியாக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

கொழுக்கட்டை

1. ஒரு வாழை இலை (அல்லது) பாலிதீன் பேப்பர் எடுத்து அதன் மீது ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவை எடுத்து மெல்லியதாக வட்டமாக தட்டிக் கொள்ளவும்.

2. தட்டிய மாவில் தேங்காய் பூர்ணத்தை ஒரு தேக்கரண்டி வைத்து இரண்டாக மடித்து, பூர்ணம் வெளியில் வராதவாறு ஓரத்தில் நன்றாக அழுத்தி விடவும்.

3. இவ்வாறு தயாரித்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து, சிறிது நேரம் (5 நிமிடம்) கழித்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு

1. பூர்ணத்திற்கு தேவைப்பட்டால் சிறிது சிறிதாக உடைத்த முந்திரி, திராட்சைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

2. வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரில் சிறிது எண்ணெய் தடவி பிறகு அரிசி மாவைத் தட்டினால் மாவு ஒட்டாமல் எடுக்க வரும்.

3. அரிசி மாவை இரண்டாக மடிக்கும் போது வாழை இலை அல்லது பாலிதீன் பேப்பரோடு சேர்த்து மடித்தால் சுலபமாக வரும்.

4. அரிசி மாவை மிகவும் மெல்லியதாக தட்டினால் ஓட்டையாகி விடும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.