சமையல் குறிப்புகள்
பொரியல் வகைகள்

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

potato podimas

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 200 கிராம்
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. உருளைக்கிழங்கை நன்கு கழுவி மெல்லியதாகவும், சிறியதாகவும் நறுக்கி, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

2. அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய்த் தூள், கரம் மசாலாவைச் சேர்த்து, அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து கிளறவும்.

3. அடுப்பின் தணலை குறைவாக வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து கிளறி மூடி வைத்து வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் உப்பு சேர்க்க வேண்டும்.

4. பாத்திரம் அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும்.

5. அதிகம் வேக விட்டால் கிழங்கு ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். ஆகவே, முக்கால் பதம் வெந்ததும் இறக்கி வைத்து, ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்து பிறகு பரிமாறவும்.

குறிப்பு

1. உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் ஊற்றி, அவனில் (சுமார் 6 நிமிடம் வரை) வேக வைத்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் சீக்கிரம் வெந்து விடும்.

2. உருளைக்கிழங்கை தோல் சீவாமல் போடுவதால் கூடுதல் தனிச் சுவையுடன் இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.