சமையல் குறிப்புகள்
பொரியல் வகைகள்

கீரை பொரியல்

keerai poriyal

தேவையான பொருட்கள்

அரைக் கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 5
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கீரையை களை நீக்கி கொய்து, நன்றாக கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும்.

4. அதனுடன் நறுக்கிய வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

5. வெங்காயம் சிவக்கும் வரை நன்றாக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.

6. அதனுடன் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

7. பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்.

8. கீரையில் உள்ள தண்ணீர் சுண்டி, கீரை நன்றாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. கீரை நிறம் மாறாமல் இருக்க 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம்.

2. கீரையை மூடி வைக்காமல் மிதமான தீயில் வேக வைப்பதனால் கீரையில் உள்ள சத்துக்கள் அழியாமலும், நிறம் மாறாமலும் இருக்கும்.

3. இந்த சமையல் செய்முறை அனைத்து வகை கீரைகளுக்கும் பொருந்தும்.

4. தேவைப்பட்டால் ஒரு மேஜைக்கரண்டி அரை வேக்காடு வேகவைத்த பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்தும் செய்யலாம். (பருப்பு நன்றாக வெந்து விட்டால் பொரியல் கூட்டு போல் ஆகிவிடும்).

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.