சமையல் குறிப்புகள்
ரசம் வகைகள்

கொள்ளு ரசம்

kollu rasam

தேவையான பொருட்கள்

கொள்ளு - 50 கிராம்
தக்காளி - 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு

ரசப் பொடி செய்ய

துவரம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
மல்லி - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. கொள்ளை நன்றாக ஊறவைத்து களைந்து, வேகவைத்துக் கொள்ளவும்.

2. வேக வைத்த தண்ணீரை வடித்து, அதில் சிறிதளவு மசித்த கொள்ளையும் கலந்து எடுத்துக் கொள்ளவும். (ஒரு கோப்பை அளவு)

3. புளியை 2 மேஜைக்கரண்டி அளவு தண்ணிரில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

4. புளிக்கரைசலில் தக்காளி, உப்பு போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

5. பூண்டை ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து, நசுக்கிய பூண்டையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி-தக்காளி கரைசலையும், கொள்ளுத் தண்ணீரையும் சேர்க்கவும்.

8. அதில் சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்று இரண்டாக பொடித்து சேர்க்கவும். அல்லது ரசப்பொடி 2 தேக்கரண்டி சேர்க்கவும்.

9. பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

10. ரசம் நுரைத்து பொங்கி வரும் போது மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. கொள்ளு ரசம் உடல் வலிமைக்கு நல்லது. சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடடக்கும்.

2. கொள்ளு பெண்கள் கருப்பைப்பையில் இருக்கும் அழுக்கை அகற்றும் சக்தி கொண்டது.

3. கொள்ளு சூடான உணவுப்பொருள் என்பதால் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.