சமையல் குறிப்புகள்
நண்டு உணவு வகைகள்

நண்டு வறுவல்

crab varuval

தேவையான பொருட்கள்

நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கோப்பை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பாதி சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

5. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

7. பிறகு இதனுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

8. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

9. இதனுடன் கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் நண்டை சேர்த்து லேசாக பிறட்டி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.

10. பிறகு தேங்காயை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

11. நண்டு நன்றாக வெந்து குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும், மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்பு

1. நண்டை ஓடு நீக்கி கழுவியதும் சிறிது நேரத்தில் சமைத்து விடவும். இல்லையென்றால் நண்டு உள்ளே குழைந்து விடும்.

2. இஞ்சி பூண்டு விழுதில் இஞ்சி அதிகமாகவும், பூண்டு குறைவாகவும் சேர்த்து அரைக்கவும்.

3. தேங்காய் விழுதுக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

4. நண்டு சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.